தூத்துக்குடி: மதுரையில் எடப்பாடி நடத்தும் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி பகுதியில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் நாளை (20ம் தேதி) அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்கு அப்பகுதியில் உள்ள முக்குலத்தோர் சமுதாயம் சார்பில் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு, பல பகுதிகளில் தேவர் சமுதாயத்தை புறக்கணிக்கும் எடப்பாடியே திரும்பி போ.. மதுரைக்கு வராதே.. என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
தூத்துக்குடியில் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் கே.என்.இசக்கிராஜா தலைமையில் மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் மதுரையில் நாளை நடக்க உள்ள எடப்பாடி மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பரபரப்பு போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளன. அதில் ‘தேவரினத்தை அழிக்க நினைத்த எடப்பாடியே, முக்குலத்தோருக்கு துரோகம் செய்த கலியுக துச்சாதனே, பசும்பொன்னார் பாதம் பட்டு புன்னிய பூமியாய் திகழ்ந்த மதுரை மண்ணில் உனது பாதம் பட்டால் பசுமையும் பாதாளம் போல் ஆகிவிடும். மதுரை பக்கம் வராதே… என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் தூத்துக்குடி மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.