விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றியவர் அமர்நாத் (38). இவர், அருப்புக்கோட்டை தலைமை தபால் அலுவலகத்திற்கு மாற்றுப்பணிக்கு சென்று வந்தார். அங்கு பணியாற்றியபோது, கணினி தொழில்நுட்பத்தை முறைகேடாக பயன்படுத்தி, அஞ்சலகப் பணம் ரூ.5 கோடியை தனது வங்கி கணக்கில் வரவு வைத்து கையாடல் செய்துள்ளார். இதுதொடர்பாக, விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் கடந்த 18.5.2024ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பந்தல்குடி பைபாஸ் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அமர்நாத்தை தனிப்படை போலீசார், சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.4 கோடியே 58 லட்சத்து 90 ஆயிரத்தை மீட்டனர். மீதமுள்ள பணத்தையும் மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். கைதான அமர்நாத், விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.