சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து மூன்றாவது முறையாக நேற்று காலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். கடந்த ஜூலை 31ம் தேதியுடன் பதவி காலம் முடிந்துவிட்ட நிலையில், இன்னும் பதவி நீடிப்பு உத்தரவு வராததால் அதற்காக ஆளுநர் ரவி தொடர்ந்து, டெல்லி சென்று வருகிறார் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் கடந்த ஜூலை 31ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது.
அதன்பின்னர் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படவும் இல்லை, தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்படவும் இல்லை. இதையடுத்து, தமிழக ஆளுநர் பதவியில் ஆர்.என்.ரவி தொடர்ந்து நீடித்து வருகிறார். இதற்கிடையே ஆளுநர் ரவி, தனது பதவி காலம் ஜூலை 31ம் தேதி நிறைவடைந்ததும், மறுநாள் ஆகஸ்ட் 1ம் தேதி காலை விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு 4 நாட்கள் இருந்துவிட்டு, 4ம் தேதி சென்னை திரும்பினார். ஆனாலும் அவரது பதவி நீட்டிப்பு உத்தரவு டெல்லியில் இருந்து வரவில்லை.
தொடர்ந்து, கடந்த 19ம் தேதி திங்கட்கிழமை, இரண்டாவது முறையாக, ஆளுநர் ரவி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். மூன்று நாட்கள் டெல்லியில் இருந்து விட்டு கடந்த 21ம் தேதி டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். இந்நிலையில், ஆளுநர் ரவி, மூன்றாவது முறையாக நேற்று (சனிக்கிழமை) காலை 6.40 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர், வரும் 25ம் தேதி ஞாயிறு இரவு 8.20 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார்.
தொடர்ந்து, தனக்கு பதவி நீட்டிப்பு உத்தரவை பெறுவதற்காக, தொடர்ச்சியாக மூன்று முறை அவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் டெல்லியில் இருந்து ஆளுநரின் பதவி நீட்டிப்பு குறித்து, இதுவரையில் எந்தவிதமான தகவலும் வரவில்லை. இந்த முறை ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி நீட்டிப்பு உத்தரவு பெற்று, சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே மற்றொரு தகவல், தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநரை நியமிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாகவும், புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரையில், ஆர்.என். ரவி தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.