புதுடெல்லி: வங்காள விரிகுடா கூட்டமைப்பு நாடுகளுக்கான பொது செயலாளராக வெளியுறவுத்துறை அதிகாரி இந்திரா மணி பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் அமரும் முதல் இந்தியர் இவர். வங்காள விரிகுடா கடல் பகுதியில் இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய 7 நாடுகள் அமைந்துள்ளன. இந்த நாடுகளுக்குள் வர்த்தகம், தொழில்நுட்பம் முதலீடு, சுற்றுலா, வேளாண்மை, மீன்வளம், தொலைதொடர்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு அளிக்க வசதியாக ‘பிம்ஸ்டெக்’ (வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவு திட்டம்) கூட்டமைப்பு 2014ல் உருவாக்கப்பட்டது.
அதன் தலைமையகம் வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ளது. ‘பிம்ஸ்டெக்’ கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அதன் பொது செயலாளரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தேர்வு செய்வார்கள். இந்த நிலையில், ஐ.நாவுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதியாக இருந்து வந்த வெளியுறவுத்துறை அதிகாரி இந்திரா மணி பாண்டே ‘பிம்ஸ்டெக்’ கூட்டமைப்பின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை வகிக்கும் முதல் இந்தியரும் இவர்தான். பூடான் அதிகாரி தென்சினிடம் இருந்து அவர் பொறுப்பை விரைவில் ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.