தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுவது ஒன்றிய அரசின் கண்ணை உறுத்துவதாக தெரிகிறது. அதனால் தான் மதுரையில் உள்துறை அமைச்சர் பேச்சு பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளையும் தாண்டி பற்றி எரியும் பிரச்னையை ஒன்றிய அரசு தீர்த்தபாடில்லை. ஆனால் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க பல்வேறு யுக்திகளை கையாளுகிறது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023ம் ஆண்டு மே 3ம் தேதி இரு சமூக மக்களுக்கிடையே கலவரம் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளையும் தாண்டி நடக்கும் பிரச்னை முடிந்தபாடில்லை.
பெரும்பான்மை மெய்டீ இனத்தினருக்கும் சிறுபான்மை குக்கி பழங்குடி சமூகத்தினருக்கும் இடையே நடந்த மோதல் நாட்டையே உலுக்கியது. மக்களவையில் கடும் விவாதம் நடந்தும் பிரதமர் மோடி அங்கு செல்லாதது புகைந்துகொண்டேதான் உள்ளது. கடந்த பிப்ரவரியில் பாஜ ஆட்சி கலைக்கப்பட்டு தற்போது ஜனாதிபதி ஆட்சி அங்கு நடந்து வருகிறது. இந்நிலையில் மணிப்பூரில் மெய்டீ இன அமைப்பான அரம்பாய் தெங்கோல் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்தி பரவியதைத் தொடர்ந்து அங்கு பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தது.
தலைநகர் இம்பால் வரை கடந்த இரண்டு நாட்களாக சாலை மறியல், பிரதான சாலைகளில் டயர்களை வைத்து தீயிட்டுக் கொளுத்துவது, பாதுகாப்பில் இருக்கும் காவல் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடைபெறுவதால் பதற்றம் நிலவி வருகிறது. இப்பிரச்னையை தீர்க்க ஒன்றிய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்று மகாராஷ்டிரா தேர்தல் 2024 எப்படி திருடப்பட்டது என்பதனை ஆதாரத்தோடு ராகுல்காந்தி விளக்கியிருக்கிறார். 2019 மே தேர்தலில் 8.98 கோடி வாக்காளர்கள், 2024 மே தேர்தல் – 9.29 கோடி வாக்காளர்கள், 2024 நவ. தேர்தலில் 9.70 கோடி வாக்காளர்களாக உயர்ந்து உள்ளனர்.
5 வருடங்களில் 31லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். ஆனால் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், 2024 சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் நடந்தது. இந்த 5 மாதத்துக்குள், 41 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இது எப்படி என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கவேயில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது தில்லுமுல்லு நடத்தி ஆட்சியை கைப்பற்றுவதும், தக்கவைப்பதுமாக ஒன்றிய அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்நிலையில் மதுரையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வரும் ஜூன் 22ம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தி தர வேண்டும். எனது கண்ணும், காதும் தமிழ்நாட்டிலேயே இருக்கின்றன. 2024-ல் ஒடிசா, அரியானா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் பாஜ ஆட்சி அமைந்தது. முருக பக்தர்கள் மாநாட்டில், நீங்கள் ஒவ்வொருவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு நம்முடைய வலிமையையும், ஒற்றுமையையும் காட்ட வேண்டும் என பேசி உள்ளார். ஒன்றிய அரசு அதிக திட்டங்களையும், நிதியையும் கொடுத்ததாக கூறும் அவர், அதனை விளக்கவில்லை.
மொத்தத்தில் அவரது பேச்சு அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அமைதியாக வாழும் தமிழ்நாட்டில் மத ரீதியாக பிளவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் பெரிய அசம்பாவிதம் ஏற்படுத்த வேண்டும். இதனால் ஆட்சிக்கு கெட்ட பெயர் வர வேண்டும். இதன்மூலம் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை மாற்ற வேண்டும் என பாஜ நினைப்பதாக ஆளுங் கூட்டணி தலைவர்கள் கருதுகின்றனர். தமிழ்நாட்டில் மதவாத அரசியல், பிளவுவாத அரசியல் எடுபட்டதில்லை என்பது தான் கடந்த கால வரலாறாக உள்ளது.