சென்னை: போக்சோ உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலையை எதிர்த்து உடனடியாக மேல் முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கும்படி விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் அனுப்பியுள்ளார். போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்ததை எதிர்த்து மேல் முறையீடு செய்யாதது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதன் எதிரொலியாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், “போக்சோ உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளின் விடுதலை தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். உரிய சட்ட கருத்துரைப் பெற்று மேல்முறையீடு செய்திட புலன் விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். போக்சோ வழக்கில் குற்றவாளி விடுவிக்கப்பட்டால், மேலதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்ல அறிவுறுத்த வேண்டும். போக்சோ வழக்குகளில், விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என சட்ட ஆலோசனை பெற்று, தாமதமின்றி மேல் முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை அதிகாரிகளுக்கும், சிறப்பு அரசு வழக்கறிஞர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்,” இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.