போரூர் : சென்னையில் உள்ள ஒன் பாராமவுண்ட் ஐ.டி. பூங்காவை 2,215 கோடி ரூபாய்க்கு சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் விலைக்கு வாங்கி உள்ளது. சென்னை போரூரில் 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒன் பாராமவுண்ட் ஐ.டி. பூங்காவில் 24 லட்சம் சதுர் மீட்டர் அளவுக்கு அலுவலக கட்டமைப்பு உள்ளது. 3 டவர்களை கொண்ட இந்த கட்டிடத்தில் யுபிஎஸ் இந்தியா டெக்னோலஜி சென்டர், டவ் ரசாயன நிறுவனம், நில்சன் ஐகியூ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. RMZ கார்ப்பரேஷன் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் கனடா ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியத்திற்கு சொந்தமாக இருந்த இந்த ஒன் பாராமவுண்ட் ஐ.டி. பூங்கா, தற்போது சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கெப்பல் லிமிடெட், இந்த ஐ.டி.பூங்காவை 2,215 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது. தங்களது முதலீட்டு எல்லைகளை விரிவடைய செய்வதன் ஒரு பகுதியாகவே ஐ.டி.பூங்காவை விற்றுள்ளதாக RMZ நிறுவனம் தெரிவித்துள்ளது. கனடா ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியத்துடன் இணைந்து இந்தியாவின் 5 நகரங்களில் 125 லட்சம் சதுர மீட்டர் அளவில் வணிக ரீதியான இடங்களை RMZ நிறுவனம் கைவசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.