மாட்ரிட்: இங்கிலாந்தின் லிவர்பூல் கால்பந்தாட்ட அணிக்காக ஆடி வந்த, போர்ச்சுகல் நட்சத்திர வீரர் டீகோ ஜோடா, ஸ்பெயினில் நடந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கால்பந்து உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டீகோ ஜோடா (28). அந்நாட்டு அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர். போர்ச்சுகல்லை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு நெருக்கமானவர். முன்கள ஆட்டக்காரரான டீகோ, முக்கியமான கட்டங்களில் சிறப்பாக ஆடி கோல் போடுவதில் வல்லவராக திகழ்ந்தவர்.
டீகோவுக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆனது. இந்நிலையில், நுரையீரல் கோளாறு காரணமாக டீகோவுக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. அது தொடர்பான மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக இங்கிலாந்து நாட்டுக்கு தன் சகோதரர் ஆண்ட்ரே சில்வாவுடன் டீகோ சென்றார். விமான பயணத்தை தவிர்ப்பதற்காக லம்போர்கினி சொகுசு காரில் ஸ்பெயின் நாட்டின் ஜமோரா மாகாணத்தின் செ்ரனாடிலா மாநகரில் டீகோ சென்றபோது அந்த கார் விபத்துக்குள்ளானது.
வேறொரு வாகனத்தை முந்த முற்பட்டபோது காரின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் டீகோவும் அவரது சகோதரரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டீகோ இறந்த சம்பவம், கால்பந்தாட்ட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரொனால்டோ, எக்ஸ் வலைதளப் பக்கத்தில், டீகோவுடன் தான் இருக்கும் படத்தை பகிர்ந்து ஆழ்ந்த இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.