வாடிப்பட்டி: மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 33 வயதான பெண் பணி புரிந்து வருகிறார். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இவர் பணியில் உள்ள குழுமத்தின் பயிற்சியாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும், சோழவந்தானை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர், இந்த பெண்ணின் வாட்ஸ் அப்புக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த பெண் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபர் குறித்து வாடிப்பட்டி காவல் நிலையம் மற்றும் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.