தர்மபரி: பள்ளி சிறுமிகளிடம் இன்ஸ்டாவில் பழகி, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வரவழைத்து ஆபாச படம் பிடித்து உல்லாசத்திற்கு அழைத்த 3 வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சுங்கரஹள்ளியை சேர்ந்தவர் சரவணன்(22), டிரைவர். கெட்டூர் பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்(19). கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நண்பர்களான இருவரும், 17 வயதுடைய பிளஸ்1 படிக்கும் 2 சிறுமிகளிடம் இன்ஸ்டாகிராமில் பழகியுள்ளனர். அப்போது, அவர்களை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமிகளை நேரில் வரவழைத்து தனியாக அழைத்துச் சென்று, அரைகுறை ஆடைகளுடன் செல்போனில் ஆபாசமாக படம் எடுத்துள்ளனர்.
பின்னர், அந்த படத்தை வைத்துக்கொண்டு, சிறுமிகளை தங்களுடன் உல்லாசமாக இருக்கும்படி இருவரும் அழைத்துள்ளனர். ஆனால் சிறுமிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அதனால் ஆத்திரம் அடைந்த இருவரும், சிறுமிகளின் ஆபாச படத்தை, பொத்தானூரை சேர்ந்த தங்களது நண்பரான டிரைவர் வெங்கடேஷ்(24) என்பவருக்கு அனுப்பியுள்ளனர். பின்னர், மூவரும் சேர்ந்து அந்த சிறுமிகளை குறிப்பிட்ட இடத்திற்கு வரும்படி கூறி மிரட்டியுள்ளனர். வர மறுத்தால், வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை பதிவேற்றி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன சிறுமிகள் இருவரும், நடந்த சம்பவம் குறித்து தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பொம்மிடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். அதன் பேரில், செந்தமிழ், வெங்கடேஷ், சரவணன் ஆகிய மூவரையும், போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.