அணைக்கட்டு: அணைக்கட்டு அருகே பொற்கொடியம்மன் கோயில் புஷ்பரத ஏரித்திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வேலங்காடு பொற்கொடியம்மன் கோயில் ஏரித்திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி புதன்கிழமையன்று நடைபெறுகிறது. இந்த திருவிழாவை இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுடன் வல்லண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு ஆகிய 4 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர்.அதன்படி இந்தாண்டு திருவிழா இன்று நடந்தது. நேற்று முன்தினம் இரவு ஏரியில் பச்சை போடுதல் நடைபெற்றது. இன்று காலை ஏரிக்கோயிலில் நடை திறக்கப்பட்டு மூலவர் பொற்கொடியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. நீண்ட வரிசையில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
விவசாயிகள் தங்களது கால்நடைகள் நோய்நொடியின்று இருக்க வேண்டி கால்நடைகளுடன் கோயிலை வலம் வந்தனர். மேலும் மண்ணால் செய்யப்பட்ட ஆடு, மாடு, மனிதர்களின் உருவ பொம்மைகள், கண்மலர் போன்றவற்றை நேர்த்திக்கடன் செலுத்தினர். வெளியூர்களில் இருந்து மாட்டுவண்டிகள், டிராக்டர், லாரிகளில் தென்னங்கீற்று, வேப்பிலை கட்டிக்கொண்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வல்லண்டராமம் கிராமத்தில் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப ரதத்தில் பொற்கொடியம்மன் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பின் வீதியுலா தொடங்கியது. இன்று காலை அன்னாசிபாளையம் கிராமத்தில் புஷ்பரதம் வீதி உலா நடைபெற்றது. இதைதொடர்ந்து வேலங்காடு ஏரிக்கு புஷ்பரதம் புறப்பட்டது. வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
பிற்பகல் வேலாங்காடு ஏரியில் திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் புஷ்பரதம் பவனி வந்தது. அப்போது பக்தர்கள் உப்பு, மிளகு, பூ, தங்களது விவசாய நிலத்தில் விளைந்த தானியங்கள் போன்றவற்றை தேர் மீது வீசி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். பின்னர் புஷ்ப ரதம் ஏரியில் உள்ள கோயிலை வலம் வந்து கோயிலுக்கு அருகே நிலை நிறுத்தப்பட்டது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர். ஏரித்திருவிழாவையொட்டி பல்வேறு பொருட்கள் விற்பனை கடைகள், சிறுவர்கள் விளையாடி மகிழ ராட்டிணம் உள்பட ஏராளமான விளையாட்டு உபகரணங்கள் இருந்தது. பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து அறநிலையத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேற்று முதலே வேலங்காடுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏரி கோயிலுக்கு பக்தர்கள் வருவதற்கு வசதியாக மூன்று இடங்களில் பாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இன்று மாலை புஷ்பரதம் மீண்டும் வேலங்காடு கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. நாளை காலை பனங்காடு கிராமத்தில் புஷ்ப ரதம், அந்தி தேர் வீதியுலா நடைபெறும். அன்றிரவு அம்மன் குதிரை வாகனத்தில் அன்னாசிபாளையத்தில் பவனி வருவார். 16ம்தேதி காலை மீண்டும் வேலங்காட்டிலும், மாலை பனங்காட்டிலும் அம்மன் வீதியுலா நடைபெறும். 17ம்தேதி வல்லண்டராம் கிராமத்தில் அம்மன் வீதியுலா மற்றும் காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அண்ணாமலை, எழுத்தர் ஆறுமுகம் மற்றும் 4 கிராம மேட்டுக்குடிகள், பொதுமக்கள், கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.