டெல்லி: குஜராத் போர்பந்தர் அருகே கடலில் மீன்பிடித்தபோது காணாமல் போன தமிழ்நாடு மீனவரை மீட்க நடவடிக்கை தேவை என ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். குஜராத் போர்பந்தர் அருகே கடலில் மீன்பிடித்தபோது தூத்துக்குடி மீனவர் அண்ணாதுரை தவறி விழுந்துள்ளார். கடலில் மூழ்கி காணாமல் போன மீனவரை தேடப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசிய கனிமொழி எம்.பி., இதுகுறித்த கடிதத்தை அளித்தார்.
இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது; தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கடலோர காவல்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்கவும், குஜராத் போர்பந்தர் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன தூத்துக்குடி அயன்பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் திரு. அண்ணாதுரையை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களைச் சந்தித்துக் கேட்டுக் கொண்டேன்.