புதுடெல்லி: இந்தியாவில் 2025 முடிவில் மக்கள்தொகை 146 கோடியாக இருக்கும் எனவும், கருவுறுதல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநா மக்கள்தொகை நிதியம் (யுஎன்எப்பிஏ) அமைப்பு 2025ம் ஆண்டுக்கான உலக மக்கள்தொகை நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், 2025ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 146 கோடியே 39 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும், அதன் கருவுறுதல் எண்ணிக்கை குறைந்து வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய பெண்கள் தற்போதைய தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மக்கள்தொகை அளவை பராமரிக்க தேவையானதை விட குறைவான குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர். அதாவது, இந்த பதிலீடு விகிதம் 2.1 சதவீதமாக இருக்க வேண்டிய நிலையில், 1.9 சதவீதமாக குறைந்துள்ளது. பிறப்பு விகிதம் குறைந்து வந்தாலும், இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவாகவே உள்ளது. 0-14 வயது வரம்பில் 24 சதவீதம், 10-19 வயது வரம்பில் 17 சதவீதம், 10-24 வயது வரம்பில் 26 சதவீதம் பேர் உள்ளனர். வேலை செய்யும் வயது பிரிவான 15-64 வயது வரம்பில் 68 சதவீத மக்கள் உள்ளனர்.
இது இந்தியாவின் பெரும் பலமாக கருதப்படுகிறது. நாட்டில் முதியோர் எண்ணிக்கை (65 வயதுக்கு மேற்பட்டவர்கள்) 7 சதவீதமாக உள்ளது. இது வரும் காலங்களில் ஆயுட்காலம் மேம்படும் போது அதிகரிக்கும். தற்போது நிலவரப்படி, ஆண்களின் ஆயுட்காலம் 71 ஆண்டுகளாகவும், பெண்களுக்கு 74 ஆண்டுகளாகவும் உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை அடுத்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு வீழ்ச்சி அடையத் தொடங்கும். அப்போது மொத்த மக்கள்தொகை 170 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* 1960ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 43.6 கோடியாக இருந்தபோது, ஒவ்வொரு பெண்களும் சராசரியாக 6 குழந்தைகள் பெற்றுக் கொண்டனர். இன்று சராசரியாக பெற்றுக் கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது.