சென்னை: நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். ஒன்றிய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: 2026ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027ம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பாஜ வெளிப்படையாக அறிவித்துள்ளது.
தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பாஜவுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்து விட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது. நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். ஒன்றிய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.