புதுடெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஒன்றிய அரசு ஓபிசி மக்கள் தொகையையும் கூடுதலாக சேகரிக்கலாம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘ இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகின்றது. கடந்த 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க வேண்டும். 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்ந்து தோல்வியடைந்ததால் பொருளாதார திட்டமிடல் மற்றும் சமூகநீதி திட்டங்களுக்கு தேவையான முக்கிய தகவல்கள் சேகரிக்கப்படவில்லை.
இதன் விளைவாக 12கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013, அல்லது பிரதமரின் கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் உரிய பலன்களை பெற முடியவில்லை. தாமதமான மக்கள் தொகை கணக்கெடுப்பை அரசு அடுத்த சில மாதங்களில் நடத்தக்கூடும். 1951ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பும் எஸ்.சி, எஸ்டி பிரிவினர் மக்கள் தொகையில் எவ்வளவு பேர் என்ற தரவுகளை சேகரிக்கிறது. எந்த சிரமமும் இல்லாமல் கூடுதலாக ஒரு வரிசையை சேர்ப்பதன் மூலமாக மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி மக்கள் தொகை தரவையும் அரசு சேகரிக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.