பிரயாக்ராஜ்: நாட்டிலுள்ள 90 சதவீத மக்கள் பயன் பெற சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடந்த சம்விதான் சம்மான் சம்மேளனம் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். ராகுல் காந்தி தன் உரையில், “அரசியலமைப்பு சட்டம் என்பது வெறும் 10 சதவீத மக்களுக்கானதல்ல. அது நாட்டின் அனைத்து குடிமக்களுக்குமானது.
அரசியலமைப்பு தொழிலதிபர்களால் பாதுகாக்கப்படவில்லை. ஏழைகள், தொழிலாளர்களால்தான் பாதுகாக்கப்படுகிறது. 90 சதவீத மக்கள் அரசியலமைப்பில் பங்கேற்க முடியவில்லை என்றால் அரசியலமைப்பை நாம் பாதுகாக்க முடியாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் நாட்டில் கொள்கைகளை உருவாக்க முடியாது. நாட்டின் 90 சதவீத மக்கள் நலனுக்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மிகவும் அவசியம். ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும் அரசியலமைப்பை பாதுகாப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம்” என்று இவ்வாறு கூறினார்.