கோவை: கோவை சோமையம்பாளையம் பகுதியில் பிரபல தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் சென்னை கிளை அலுவலக இமெயிலுக்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், கோவை சோமையம்பாளையத்தில் உள்ள உங்களது பள்ளி வகுப்பறை மற்றும் கழிவறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு வெடித்தால் அதிக பாதிப்பு ஏற்படும். இரு வகையான வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து சென்னை பள்ளி முதல்வர் கோவை பள்ளி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதுதொடர்பாக, பள்ளி நிர்வாகத்தினர் வடவள்ளி போலீசில் புகார் அளித்தனர். பின்னர் மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்து போலீசார் சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து வடவள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.