டெல்லி: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் 17 வயது தம்பியை கடத்தியது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை ஜெகன் மூர்த்தி, போலீஸ் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆகவே, முன் ஜாமீன் கோரி பூவை ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது, ஏடிஜிபியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
பூவை ஜெகன் மூர்த்திக்கு கண்டனம் தெரிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஏடிஜிபி ஜெயராம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிமன்றம், கைது உத்தரவை ரத்து செய்தும், பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை வேறு அமர்வுக்கு மாற்றியும் உத்தரவிட்டது. இதற்கிடையே, இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பூவை ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை கடந்த 27-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஜெகன்மூர்த்தி மேல்முறையீடு செய்தார். ஆதாரங்கள் இல்லாமல் தன்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதியப்பட்டுள்ளதாகவும் ஜெகன்மூர்த்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.சட்டமன்ற உறுப்பினராக, மதிக்கத்தக்க பொறுப்பில் உள்ள தனது பெயரை களங்கப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மனுவில் ஜெகன்மூர்த்தி குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கு விசாரணை இன்று(ஜூன் 30) உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, கோட்டீஸ்வர் சிங் அமர்வு முன் வந்தபோது, பூவை ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.