பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் ஊராட்சி ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர் புவியரசன். சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மகன் சக்தி சரவணன் (9). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சக்தி சரவணனை கடந்த 8ம்தேதி வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சக்தி சரவணன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
சிறுவனுக்கு காய்ச்சல், தொண்டை வலி, டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இருந்ததாக கூறப்படுகிறது. சென்னீர்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முழுமையான சுகாதார வசதி செய்யாததால், ஆங்காங்கே குப்பை, சாக்கடை தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் சென்னீர்குப்பம் பகுதியில் வேறு யாருக்காவது காய்ச்சல் அறிகுறி உள்ளதா என மருத்துவர் குழுவினர் முகாமிட்டு தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.