பூந்தமல்லி: கர்நாடக மாநிலத்திலிருந்து கன்டெய்னர் லாரியில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள 10 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் கைது செய்யப்பட்டார். ஆவடி காவல் ஆணையகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக, ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, பூந்தமல்லி சுற்று வட்டார பகுதிகளில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்தும் விதமாக பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பூந்தமல்லி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பாரிவாக்கம் சிக்னல் அருகே பூந்தமல்லி தனிப்படை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த ஒரு கன்டெய்னர் லாரியை மடக்கி சோதனை செய்தனர்.
அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது. அவற்றை கன்டெய்னர் லாரியுடன் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்தவர் திருப்பத்தூரைச் சேர்ந்த டிரைவர் விக்னேஷ் (28) என தெரியவந்தது. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து குட்காவை கன்டெய்னர் லாரியில் ஏற்றி வந்து சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சப்ளை செய்ய முயன்றது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.50 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, விக்னேஷை கைது செய்து, இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை, ஆவடி துணை கமிஷனர் ஐமான் ஜமால் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘பூந்தமல்லி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தி வைக்கும் இடங்களுக்கு கன்டெய்னர்கள், லாரிகளில் குட்கா கடத்தி வரப்பட்டு அங்கிருந்து பிரித்து பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தகவல் வருகிறது.
எனவே, வாகனம் நிறுத்துமிடங்களில் உள்ள வாகனங்களில் தனிப்படை போலீசார் மூலம் தீவிர சோதனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் குட்கா தடை செய்யப்படாததால், அவை அங்கிருந்து தமிழகத்திற்கு வருகிறது. இதனை தடுப்பதற்கு மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் அந்தந்த மாநில போலீசாருடன் இணைந்து சோதனை பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் போதைப்பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த குட்காவை கடத்தி வந்த சம்பவத்தில் கன்டெய்னர் உரிமையாளர் யார், வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’’ என்றார்.