பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே போதையில் வழிப்பறியில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்ததையடுத்து விசாரிக்க சென்ற போலீஸ்காரரை ஓடஓட 3 பேர் கும்பல் விரட்டிய சம்பவ வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் திருமாவளவன் என்பவர் கோயில் திருவிழாவிற்கு வந்துள்ளார். அப்போது அங்கு கஞ்சா போதையில் இருந்த 3 பேர், திருமாவளவனை வழிமடக்கி கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் கொடுக்க மறுக்கவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கையில் கிழித்துவிட்டு அவரிடம் இருந்த பணத்தை பறித்துகொண்டு தப்பினர்.
இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்படி ரோந்து பணியில் இருந்த பூந்தமல்லி போலீஸ்காரர் சரவணன், சம்பவம் குறித்து விசாரிக்க சென்றுள்ளார். அப்போது, கஞ்சா போதையில் இருந்த 3 பேரும் கையில் கத்தியுடன் போலீஸ்காரர் சரவணனை மிரட்டும் தொனியில் ஓட ஓட விரட்டியுள்ளனர். கையில் தடி இருந்தும் போலீஸ்காரர் அங்கிருந்து ஓடிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த சபரி, சூர்யா, சந்தோஷ் ஆகிய 3 பேரை பிடித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.