திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாத சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வே.முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் எஸ்.சந்திரன் எம்எல்ஏ கலந்துகொண்டு 44 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார். இதன்பிறகு எம்எல்ஏ பேசும்போது, ‘’முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துவருகிறது.
இதன்காரணமாக அரசு பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்து தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கற்பித்தலில் புதிய திட்டங்கள் செயல்படுத்திவருவதால் அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. கிராம மக்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை ஏற்று பூனிமாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் கலையரங்கம் கட்டப்படும்’ என்றார்.
விழாவில், திருவாலங்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் கூலூர் எம்.ராஜேந்திரன், பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சி.ஜே.சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் விஜயகுமாரி சரவணன், திமுக நிர்வாகிகள் நல்லாட்டூர் கமலநாதன், குப்பன், அர்ஜுன் ரெட்டி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாபு, வெங்கடாசலம் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.