சென்னை: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3வது வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை – சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது. இந்த பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பூந்தமல்லி- கலங்கரை விளக்கம் வரை, மொத்தம் 26 கி.மீ., தூரத்திற்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் வேகமான நடந்து வருகின்றன. இதில், பூந்தமல்லி பைபாஸ் முதல் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரை மேம்பால பாதையாகவும், கோடம்பாக்கம் மேம்பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சுரங்கப்பாதையாகவும் வழித்தடம் அமைகிறது.
இந்த வழித்தடத்தில் 19 மேம்பால மெட்ரோ ரயில் நிலையங்களும், 9 சுரங்கப்பாதை ரயில் நிலையங்களும் அமைகின்றன. மேலும், மேம்பால பாதை பணிகள் முடிக்கப்பட்டு, தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பூந்தமல்லில் 2வது மிகப்பெரிய மெட்ரோ ரயில் பணிமனை அமைகிறது. சுமார் 40.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.187 கோடி செலவில் இதற்கான கட்டுமான பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகின்றன. இங்கு மொத்தம் 17 கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் பழுதுபார்க்கும் இடம், தானியங்கி முறையில் சுத்தப்படுத்தும் மையம், நிர்வாக அலுவலகம் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களும் இங்கு வருகின்றன.
இதேபோல் சோதனை ஓட்டத்துக்கான ரயில் தண்டவாளம், பழுதுபார்ப்புக்கு தனியாக தண்டவாளங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. பூந்தமல்லி பணிமனையில் சோதனை ஓட்டத்துக்கு தேவையான தண்டவாளம் 820 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பணி சமீபத்தில் தான் முடிந்துள்ளது. அடுத்த மாதத்தில் டிரைவர்கள் இல்லாத மெட்ரோ ரயில்கள் வந்து சேரும். இந்த ரயில்கள் வந்ததும் பணிமனையில் உள்ள பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்படும்.
பின்னர் பூந்தமல்லி – போரூர் வரை மேல்மட்ட வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். இதற்கிடையே பூந்தமல்லி பணிமனை கட்டும் பணிகள் 82 சதவீத பணிகள் முடிந்து உள்ளன. இன்னும் 6 மாதத்தில் பணிமனை பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.