* சுங்குவார்சத்திரம் வரை ரூ.8,779 கோடியில் செயல்படுத்த திட்டம்
* இரு கட்டங்களாக பணிகள் மேற்கொள்ள முடிவு
சென்னை: பூந்தமல்லி – பரந்தூர் வரையிலான 53 கி.மீ. தூரம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையில் முதல் கட்டத்தில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில் இயங்குகிறது. சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை என 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது. இந்த பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வழித்தடங்களில் பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான உயர் வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. மேலும், சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தை சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்திலுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரையிலான 15.47 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.9,335 கோடியிலும், கோயம்பேடு முதல் ஆவடி வழியாக பட்டாபிராம் வரையிலான 21.76 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.9,744 கோடியிலும், பூந்தமல்லியில் இருந்து பெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரம் வரையிலான 27.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.8,779 கோடியிலும் நீட்டிப்பதற்கு விரிவான திட்ட அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
இந்த விரிவான திட்ட அறிக்கைகள் ஒன்றிய அரசின் மூலதன பங்களிப்பினை பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் கலங்கரை விளக்கம் முதல் தலைமைச் செயலகம் வழியாக உயர் நீதிமன்றம் வரையிலான 6 கி.மீ. தொலைவுக்கும், தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மெட்ரோ ரயில் வழித்தடம் நீட்டிப்பதற்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2ம்க ட்ட திட்டத்தின் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4வது வழித்தடத்தை பெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரம் வரையில் 27.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் நீட்டிப்பு செயல்படுத்தப்படும் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கைகள் தமிழக அரசின் அனுமதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதால் பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பூந்தமல்லி – பரந்தூர் வரையிலான 52.94 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு கட்டங்களாக மெட்ேரா ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக ரூ.8,779 கோடியில் பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை செயல்படுத்தப்பட்டு அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக பரந்தூர் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பூந்தமல்லியிலிருந்து நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், திருமழிசை, பாப்பான்சத்திரம், செட்டி பேடு, தண்டலம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட், பெண்ணலூர், பெரும்புதூர், பட்டுநூல் சத்திரம் எல்காட், இருங்குளம் தொழிற்பேட்டை, மாம்பாக்கம், சுங்குவார் சத்திரம், சந்தவேலூர், பிள்ளைசத்திரம், நீர்வளூர் ஆகிய இடங்கள் வழியாக பரந்தூர் வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.