பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சியில் மழைநீரை வெளியேற்றும் பணியை நகர்மன்ற தலைவர் ஆய்வு செய்தார். பூந்தமல்லி நகராட்சி பகுதியில் மழைநீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கைகள் எடுப்பதற்கு நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 8 முதல் 15வது வார்டு வரை உள்ள 8 வார்டுகளில் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அந்தப் பகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி மழைநீரை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 8 வார்டுகளிலும் தேங்கிய மழைநீரை 13வது வார்டு பகுதியில் ஒரு இடத்தில் கொண்டு வந்து சேர்த்து அங்கிருந்து, இரண்டு ராட்சத மோட்டார்கள் மூலம் மொத்த மழை நீரையும் வெளியேற்றி, பனையாத்தம்மன் குட்டையில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை நேற்று நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் தொடங்கி வைத்தார்.
அதன்படி 8 வார்டுகளில் தேங்கி உள்ள மழைநீர் 13வது வார்டு பகுதியில் ஒரே இடத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து பனையாத்தம்மன் குட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு அந்த குட்டையில் இருந்து பைபாஸ் பகுதிக்கு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில், நகர் மன்ற துணைத் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், நகர் மன்ற உறுப்பினர் அசோக் குமார் மற்றும் நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, 1வது வார்டு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் புதர்கள், செடி, கொடிகள், குப்பை கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணி மற்றும் மருத்துவ முகாம் ஆகியவற்றை நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.