பூந்தமல்லி: பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். பூந்தமல்லியில் பார்வை குறைபாடுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பார்வை குறைபாடுடைய 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 1 முதல் 12ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் இருபாலரும் தனித்தனியாக உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இப்பள்ளி வளாகத்தில், அரசு பார்வையற்றோருக்கான தொழில் பயிற்சி மையம், பார்வையற்றோருக்கான அரசு பெண்கள் மறு வாழ்வு இல்லம், வட்டார ப்ரெய்லி அச்சகம், இடைநிலை ஆசிரியர் பயிற்சி மையம் மற்றும் பார்வையற்றோருக்கு கற்பிக்கும் ஆசிரியர் பட்டயப் பயிற்சி மையம் ஆகியவை இயங்கி வருகின்றன.
இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய 17 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வாழ்த்து தெரிவித்தார். இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையும் தொடங்கி நடைபெறுவதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.