Thursday, June 19, 2025
Home ஆன்மிகம் தெளிவு பெறுஓம்

தெளிவு பெறுஓம்

by Porselvi

?பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்?
– தனுஜா, சித்தூர்.

தூய்மையாக இருக்க வேண்டும். அங்கே பழைய துணி மணிகளை போட்டு வைத்திருப்பதோ, குப்பைகளை சேகரித்து வைத்திருப்பதோ உபயோகப்படாத பொருள்களை போடும் அறையாக பயன்படுத்துவதோ கூடாது. அதைப் போலவே, சுவாமி படத்தில் வைத்த பூவை வாரக்கணக்கில் அப்படியே விட்டு வைத்திருக்கக் கூடாது.

?எப்படி இருந்தால் எப்பொழுதும் நிம்மதியாக இருக்கலாம்?
– வா.சூரியகுமார், சென்னை.

அடக்கத்துடன் இருந்தால் எப்பொழுதும் நிம்மதி இருக்கும். மற்றவர்களைவிட நாம் எந்தத் துறையில் சிறப்புப் பெற்றிருந்தாலும், நம்மைப் பெரியவர்களாகவும் எதிரில் உள்ளவர்களை தாழ்ந் தவர்களாகவும் நினைத்துக் கொள்ளக்கூடாது. இந்த உலகத்தை விட்டுப் போகும்போது எடுத்துச் செல்வதற்கு எதுவும் இருக்காது என்பதை நினைவில் கொண்டு வாழ வேண்டும். பட்டினத்தாரின் இந்தப் பாடலை நினைவில் கொள்ளுங்கள்.

“இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருப்ப, நாய், நரிகள், பேய் கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான்’’.

?உபயப் பிரதான திவ்யதேசம்
என்றால் என்ன பொருள்?
– சாந்தி தேவி, கோவை.

உபயம் என்றால் இரண்டு. பிரதானம் என்றால் முக்கியம். எந்த இடத்தில் இரண்டு முக்கியங்கள் இருக்கிறதோ, அந்த இடத்திற்கு உபயப் பிரதானம் என்று சொல்வார்கள். சில திருத்தலங்களில், மூலவருக்கு உள்ள அத்தனைச் சிறப்புகளும் உற்சவருக்கும் இருக்கும். அப்படி இருக்கும் திருத்தலத்தை உபயப் பிரதான திவ்யதேசம் என்பார்கள். 108 திவ்ய தேசங்களிலே திருக்குடந்தைத் தலத்திற்கு உபயபிரதான திவ்யதேசம் என்று பெயர். இந்த திவ்ய தேசத்தில் மூலவருக்குள்ள அத்தனை மரியாதைகளையும் உற்சவருக்கும் செய்வார்கள்.

?துன்பங்களுக்குக் காரணம் என்ன?
– வெ.சாமியப்பன், வேலூர்.

பெரும்பாலும் நம்முடைய துக்கங்களுக்குக் காரணமாக அமைவது பேராசைதான். ஆசை என்பது அளவோடு இருக்கும். பேராசை என்பது ஒன்று கிடைத்தாலும்கூட திருப்தி அடையாமல் இன்னும் இன்னும் என்று அலையும். அதனால்தான் தாயுமானவர் “ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர்’’ என்றார். இதை விளங்கிக் கொள்வதற்கு அருமையான முல்லாவின் கதை சொல்லப்படுகிறது. முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார். அவரது நண்பர் கேட்டார்; “முல்லா, ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்;

“சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து லட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார்” நண்பர் கேட்டார்; “அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்; “பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது லட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்து
விட்டார்” நண்பர் கேட்டார்; “மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்; “சென்ற வாரம் எனக்கு 30 லட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவத்துவிட்டு எனது அத்தை இறந்துவிட்டார்” நண்பர் கேட்டார்; “சந்தோஷப்படுவதைவிட்டு ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்;

“மூன்று நாட்களுக்குமுன் எனது தாத்தா இறக்கும்முன் 50 லட்ச ரூபாயை எனக்கு எழுதிவைத்துவிட்டார்” நண்பர் கேட்டார்;“கொண்டாடாமல் ஏனப்பா அழுகிறாய்?” முல்லா சொன்னார்; “இனிமேல் சொத்தை எழுதிவைத்துவிட்டு இறந்து போறதுக்கு எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் இல்லையே, அதனாலதான் அழுதுகிட்டு இருக்கிறேன்” கேட்ட நண்பர் மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டார்.

?அமாவாசையில் வீட்டு வாசலில் கோலம் போடக் கூடாது என்கிறார்கள் சிலர் போடலாம் என்கிறார்கள் எது சரி?
– சுகந்தி ராஜேந்திரன், திருப்பூர்.

அமாவாசைக்கு வீட்டின் வெளியே கோலம் போடக்கூடாது. போட்டால் வீட்டில் முன்னோர்கள் வர மாட்டார்கள் என்று ஒரு கருத்து பரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. அப்படி எந்த நூலிலும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இந்த பழக்கம் ஆண்டாண்டு காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சிலர் தங்கள் குடும்ப வழக்கம் என்று போடுகின்றார்கள். எனவே இது குடும்ப வழக்கத்தை ஒட்டியது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெரும்பாலும் வருடத்திற்கு ஒரு முறை வரும் சிராத்த தினத்தில்தான் சிராத்தம் முடியும் வரை வீட்டின் வாசலிலே கோலம் போடாமல் இருப்பார்கள். சிராத்தம் முடிந்தவுடன் கோலம் போடுவார்கள். அதைப் போலவே அமாவாசையில் தர்ப் பணம் முடிந்தவுடன் கோலம் போடலாம். எது எப்படி இருந்தாலும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து கோலம் போடுவதில் தவறில்லை. பூஜைஅறை என்பது தெய்வத்துக்கு மட்டுமே உரியது.

?பூஜை அறையில் நிறைய படங்களை மாட்டி வைக்க வேண்டுமா?
– பி.சுரேந்தர்குமார், மதுரை.

அவசியமில்லை. ஒன்றிரண்டு படங்கள் இருந்தாலும் கூடப் போதுமானது. சிலர் வழிவழியாக ஆராதித்து வரும் சிறிய விக்ரகமோ, சாளக்கிராமமோ வைத்திருப்பார்கள். அது மட்டும் இருந்தாலும்கூட போதும். நிறைய படங்களை வைப்பதால் பராமரிப்பது கடினம். எனவே அளவோடு இருந்தால் பூஜை அறை அழகாக இருக்கும்.

?ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை போடுவதன் ரகசியம் என்ன?
– ப்ரியா கேசவமூர்த்தி, ஸ்ரீரங்கம்.

இதற்கெல்லாம் புராண இதிகாசங்களில் விடை கிடையாது. வெற்றி கிடைக்கும் இலை வெற்றிலை என்று சொல்லி, வெற்றிலை மாலை போடுவதால் நினைத்த காரியம் வெற்றி அடையும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் போடுகிறார்கள். வெற்றிலையை பாக்கோடு தாம்பூலம் சமர்ப்பிப்பது பூஜை பத்ததியில் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கான மந்திரங்களும் இருக்கிறது. ஆனால், வெற்றிலையை மாலையாகப் போடச் சொல்லி மந்திரமோ பத்ததியோ இல்லை. இது சரியா என்பதைவிட பல காலமாகச் செய்து வரும் இப்பழக்கத்தை பெரியோர்களும் ஏற்றுக் கொள்வதால்
தவறில்லை.

?திரிசங்கு சொர்க்கம் கதையில் நாம் என்ன தெரிந்துகொள்கின்றோம்?
– சா.வேலவன், மாயனூர்.

எத்தனைக் கோபம் வந்தாலும் ஒன்றை உருவாக்க வேண்டுமே தவிர அழிக்கக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்கின்றோம். திரிசங்கு சொந்த உடலோடு சொர்க்கம் போக வேண்டும் என்பதற்காக யாகம் செய்ய விரும்புகின்றான். யாரும் செய்து தர முன்வராதபோது விசுவாமித்திரரின் காலில் விழுகின்றான். விசுவாமித்திரர் யாகம் செய்து தர ஒப்புக்கொள்கின்றார். யாகம் நடக்கிறது. யாகத்தின் வலிமையால் அவன் சொர்க்கத்துக்குப் புறப்படுகின்றான். ஊன் உடம்போடு ஒருவன் சொர்க்கத்துக்கு வருவதை இந்திரன் விரும்பாததால் அவனைக் கீழே தள்ளுகின்றான். இப்பொழுது விஸ்வாமித்திரருக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. தன் தவ வலிமையால் இந்திரனை அப்புறப்படுத்திவிட்டு திரிசங்குவை சொர்க்கத்தில் வைக்கலாம். அல்லது கோபத்தால் இந்திரலோகத்தை அழிக்கலாம்.ஆனால் இரண்டும் செய்யவில்லை. புதிதாக ஒரு சொர்க்கத்தையே உருவாக்குகின்றார். கோபம் வந்தாலும்கூட அதை ஆக்க பூர்வமாகக் காண்பிக்க முடியும் என்கிற செய்தியை மறைமுகமாகச் சொல்கிறது இந்த நிகழ்வு.

?ஜோதிடக் குறிப்புகள் நமது பக்தி இலக்கியங்களில் வருகிறதா?
– ஆர்.பரமேஷ்வரன், சென்னை.

பக்தி இலக்கியங்களில் ஜோதிடக் குறிப்புகள் சில இடங்களில் காணப்படுகின்றன. குறிப்பாக, சைவ இலக்கியங்களில் சில தெய்வங்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் குணநலன்கள் ஜோதிடக் குறிப்புகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. ஆனால், பக்தி இலக்கியங்கள் முதன்மையாக தெய்வ வழிபாட்டுக்கும், ஆன்மிக அனுபவங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இலக்கியங்களாகும். எனக்குத் தெரிந்து பல சமயப் பெரியவர்கள் மிகத்துல்லியமாக தங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஜாதக பலன்களை எழுதி வைத்திருப்பதை பார்த்திருக்கின்றேன். சுந்தரருடைய பாடல் சொல்கின்றேன்.

திருவொற்றியூரில் பாடப்பட்ட பாடல். இதில் நிந்தாஸ்துதியாக இறைவனைப் பாடுகின்ற பொழுது மகத்தில் சனி புகுந்தது போல எனக்கு நீ ஆகிவிட்டாயே என்று பாடுகிறார்.
மக நட்சத்திரம், சிம்ம ராசியில் இருப்பது கேதுவுக்குரிய நட்சத்திரம். சனிப் பெயர்ச்சி ஆகி வருகின்ற பொழுது சிம்மராசியில் நுழைகிறது. அங்கே மகம் பூரம் உத்தரம் என்று உள்ள மூன்று நட்சத்திரத்தில் மக நட்சத்திரத்தில் நுழைகிறது. சனிக்கு முழுமையான பகை ராசியான சிம்மத்தில் பகை நட்சத்திரமான கேதுவின் நட்சத்திரத்தில் நுழைகின்ற பொழுது, ஒருவருக்கு அடுக்கடுக்கான துன்பங்கள் வரும். நாட்டிற்கும் மக்களுக்கும் பெரும் தீங்கு வரும். அத்தகைய துன்பம் எனக்கு வந்துவிட்டதே என்கிறார். ஜோதிடப் பலனோடு பாடும் பாடல் இது. இனி முழுப் பாடலையும் சுவைப்போம்.

“மகத்திற் புக்கதோர் சனியெனக் கானாய்
மைந்த னேமணி யேமண வாளா
அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால்
அழையல் போகுரு டாஎனத் தரியேன்
முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன்
முக்க ணாமுறை யோமறை யோதீ
உகைக்குந் தண்கடல் ஓதம்வந் துலவும்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே’’

வேதத்தை ஓதுபவனே! மணி முதலியவற்றைக் கரையிடத்துச் சேர்க்கும் கடல் அலைகள் வந்து உலவும் ஒற்றியூர் சிவனே! எனக்கு வலிமையாய் உள்ளவனே!! மகத்துடன் கூடிய சனி தரும் துன்பம் போல துன்பமாய் உள்ளது; வீட்டில் உள்ள பெண்கள், நான் ஒரு காரியம் சொன்னால், “கண்ணிலியே நீ என் அறிவாய்? கூவாதே!! போ!!’’ என்று சொல்வதை நான் பொறுக்க மாட்டேன்; முகத்தில் கண்ணில்லாமல் நான் எவ்வாறு வாழ்வேன்? மூன்று கண்களை உடையவனே!, இது முறையோ?அருமையான பாடல். சனிப் பெயர்ச்சியால் துன்பப்படும் நேயர்கள் தினம் விளக்கு வைத்து இந்தப் பாட்டு சொல்லலாம்.

?வாழ்க்கையில் பிரச்னைகள் வரும் போது என்ன நினைக்க வேண்டும்?
– சீதா ரங்கராஜன், திருச்சி.

போனது போச்சு, இனி ஆக வேண்டியதை யோசிப்போம் என்றோ, நல்லவேளை இதோடு போச்சு என்றோ, எல்லாம் இறைவன் செயல் நம்மை கைவிடமாட்டான் என்றோ நினைத்து மறுபடி முன்னிலும் உற்சாகமாகச் செயல்பட வேண்டியதுதான்.

?மிகப் பெரிய ராஜ ரிஷியும், தவவலிமையும் மிகுந்த விசுவாமித் திரரால் தாடகையிடமிருந்து யாகத்தைக் காத்துக்கொள்ள முடியாதா? அதற்கு ராமன் வேண்டுமா?
– பரத், சேலம்.

இதில் பல சூட்சுமமான விஷயங்கள் இருக்கின்றன. வசிஷ்டர் வாயால் மகரிஷி பட்டம் பெற்றவர் விசுவாமித்திரர். அவருக்கு நிகரான வலிமை பொருந்திய மகரிஷி கிடையாது. தாடகையை எதிர்கொள்வது அவருக்கு பெரிய விஷயமே இல்லை. ஒரு புல்லைக் கிள்ளிப் போட்டுவிட்டு, யாரும் அருகில் நெருங்காதபடி அவர் யாகத்தைக் காத்துக் கொள்ள முடியும். அவர் பத்து திசையும் வென்ற தசரதனை அழைக்கக் கூடாதா?

இந்திரனுக்கு பதவியைப் பெற்றுத் தந்தவன் அல்லவா. எனவே ராமனை அழைத்த காரணம் வேறு. விஸ்வாமித்திரரின் நோக்கம், ராமனை மிதிலைக்கு அழைத்துச் சென்று சீதையைத் திருமணம் செய்து வைக்க வேண்டும். அதற்கு ஒரு காரணமாக இந்த யாக சம்ரக்ஷன விஷயத்தை வைத்துக் கொண்டார். இரண்டாவதாக, எந்த யாகமாக இருந்தாலும் யாகத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு பகவானுக்கு இருக்கிறது. அந்த பகவானே ராமனாக அவதரித்ததால், ராமனை அழைத்துக்கொண்டு செல்கிறார்.

?கோயிலுக்குச் செல்வதால் பிரச்னை தீர்ந்துவிடுமா?
– மல்லிகா பிரசாத், வேளச்சேரி.

தீர்ந்துவிடுமா, தீராதா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். தீரும் என்ற நம்பிக்கையில் தானே கோயிலைக் கட்டி வைத்திருக்கிறார்கள். இத்தனை பேரும் போகிறார்கள். ஒரு விஷயம். பிரச்னையை பகவான் நேரடியாகத் தீர்த்து வைக்காவிட்டாலும், பிரச்னையை எதிர்கொள்ளும் வலிமையைத் தருவான். நம்பிக்கையைத் தருவான். அதனால்தான் அங்கே சென்று “நம்பி’’ “கை’’ தொழுகிறோம்.

தேஜஸ்வி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi