மும்பை: கடந்த 2002ம் ஆண்டு வெளியான ‘காண்டா லாகா’ என்ற ஒரே இசை ஆல்பம் மூலம் இந்தியா முழுவதும் ஒரே இரவில் பிரபலமானவர் நடிகையும், மாடல் அழகியுமான ஷெபாலி ஜரிவாலா (42), தொலைக்காட்சியில் நடக்கும் நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ரசிகர்களிடையேயும் நன்கு அறியப்பட்ட முகமாக வலம் வந்தார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் ஷெபாலி ஜரிவாலாவின் திடீரென மரணம் அடைந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரவு 11 மணியளவில் அவரது உடல்நிலை மோசமடைந்து, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அது தொடர்பான அறிக்கையும் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 27 அன்று அவரது வீட்டில் பூஜை நடைபெற்றது. அதற்காக விரதம் இருந்த ஷெபாலி, அன்றைய தினமும் சருமப் பொலிவிற்கான ஊசிகளை எடுத்துக்கொண்டார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக சருமத்தை இளமையாகவும், வெண்மையாகவும் வைத்திருக்க, வைட்டமின் சி மற்றும் குளுததையோன் போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஊசி மூலம் எடுத்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹாலிவுட் நடிகைகள் பயன்படுத்தியதால் பிரபலமடைந்த இந்த அழகு சிகிச்சை முறையே அவரது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தடயவியல் சோதனையில் அவரது வீட்டில் இருந்து இத்தகைய மருந்துகள் கைப்பற்றியுள்ளோம். அழகுக்காக எடுத்துக்கொண்ட சிகிச்சையே அவரது உயிருக்கு ஆபத்தாக முடிந்தது. தொ டர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.