*அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
பொன்னமராவதி : பொன்னமராவதி ஊராட்சி பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள் விரைந்து தரமாக முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அருணா அறிவுறுத்தி உள்ளார்.பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை, மாவட்ட கலெக்டர் அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்க. அந்த வகையில் கிராமப்புறங்களில் குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதார வசதி, மின் வசதி உள்ளிட்டவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
அதன்படி, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சியில், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் மூலம் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாய கழிப்பிட கட்டடத்தின் குறித்தும், நல்லூர் ஊராட்சி, வடக்கு தெருவில், 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.3.51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வடிகால் வாய்க்கால் அமைத்தல் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
நல்லூர் ஊராட்சியில் ”கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுவரும் வீட்டின் கட்டுமானப் பணி குறித்தும், நல்லூர் ஊராட்சி, கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
நல்லூர் ஊராட்சியில், கிராம நிர்வாக அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் அலுவலகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அலுவலகத்தினை கிராம சேவை மைய கட்டடத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்வது குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில், அரசமலை ஊராட்சிமன்ற அலுவலகத்தில், ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களிடம் பணிகளின் விவரம் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும், அரசமலை ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தினுள் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு வரும் பணிகள் குறித்தும், அரசமலை ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
அரசமலை ஊராட்சி, கண்டெடுத்தான்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.9.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் புதிய உணவு தானிய கிடங்கு கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் குறித்தும், அரசமலை ஊராட்சி, மதியாணி கூட்டுறவு நியாய விலைக் கடையில் நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
கொன்னையூர் ஊராட்சி, கொப்பனாப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும், கொப்பனாப்பட்டி ஊராட்சிமன்ற அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்தும், பொன்னமராவதி பேரூராட்சியில், 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் புதிதாகக் கட்டப்பட்டுவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணி குறித்தும், புதிதாகக் கட்டப்பட்டுவரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணி குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
எனவே, தமிழக அரசின் இதுபோன்ற வளர்ச்சி திட்டங்களை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆயிசா ராணி, ராமச்சந்திரன், தாசில்தார் சாந்தா, பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, ஊராட்சிமன்றத் தலைவர்கள் ராமையா, பழனிவேல், மேனகா மகேசுவரன், உதவிப் பொறியாளர்கள் செந்தில், சுரேஷ் பாபு, இளநிலைப் பொறியாளர் சுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.