*பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பொன்னமராவதி : பொன்னமராவதி அமரகண்டான் குளத்தில் உள்ள தாமரைச்செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருமயம் சட்டமன்ற தொகுதியின் பெரிய நகரமாக பொன்னமராவதி விளங்குகிறது. இங்கு பொழுதுபோக்குவதற்கு எந்த இடமும் இல்லை. இங்கு புதுக்கோட்டை மாவட்டம், சிவகங்கை மாவட்டம், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கூடும் பகுதியாக உள்ளது.
பொன்னமராவதி நகரின் மையப்பகுதியில் அமரகண்டான் குளம் உள்ளது. இந்த குளத்தின் மேற்குபுறம் காவல்நிலையம், சிவன்கோயில், பத்திர எழுத்தர்கள் அலுவலகம் உள்ளது. தெற்குப்புறம் பட்டமரத்தான் கோயில், பத்திர பதிவு அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், தபால்நிலையம், நூலகம், பெட்ரோல் பங்கு, கிழக்குப்புறம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், பேருந்து நிலையம் மற்றும் கடைகள் என நான்கு புறமும் முக்கிய அலுவலகம், கோயில்கள் என உள்ளது.
இப்பகுதி ஒரு சிறப்பு மிக்க பகுதி ஊரின் மையப்பகுதியில் அழகாக இருக்கவேண்டிய குளம் தூய்மையற்ற நிலையில் இருந்தது. இந்த குளத்தை சீர் செய்து நான்கு புறமும் சுற்றுச்சுவர் அமைக்கவேண்டும். இப்பகுதியில் பொழுதுபோக்கு இடங்கள் இல்லை.எனவே இந்த குளத்தைச்சுற்றி பூங்கா அமைத்து நடைபயிற்சி பாதை அமைக்கவேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இந்த அமரகண்டான் குளத்தை மேம்பாடு செய்து குளக்கரைகளில் பேவர் பிளாக் அமைத்து நடைபாதை அமைக்க ரூ.1.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சர் ரகுபதி நடவடிக்கை எடுத்தார்.
இதையடுத்து இந்த குளம் மேம்பாடு செய்யும் பணி தொடங்கப்பட்டது. பேவர் பிளாக் போடப்பட்டுள்ளது. நடைபாதைக்கு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த பணிகளை விரைந்து முடித்தும் இந்த குளத்தில் உள்ள தண்ணீரில் தாமரைச்செடிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான செடிகள் முளைத்துள்ளது. இந்த தாமரை செடிகளை அப்புறப்படுத்தி சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக படகு சேவை தொடங்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.