திருப்போரூர்: பொன்மார் ஊராட்சி ரேஷன் கடையில் பாலாஜி எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பொன்மார் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் பொருட்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர். இதனைகண்டதும், காரில் இருந்து இறங்கிய எம்எல்ஏ பாலாஜி, ஏன் இவ்வளவு பேர் காத்திருக்கிறீர்கள் என்று கேட்டு, கடைக்குள் சென்று அனைத்து பொருட்களும் முறையாக வழங்கப்படுகிறதா? அரசின் அத்தனை இலவச பொருட்களும் பொதுமக்களை சென்றடைகிறதா? என்று ஊழியரிடம் விசாரித்தார்.கடையில் காத்திருந்த பொதுமக்களிடமும், அனைத்து பொருட்களும் கிடைப்பதில் ஏதேனும் சிக்கல் உள்ளதாக என்று கேட்டதற்கு, அனைத்து பொருட்களும் வழங்கப்படுவதாக மக்கள் தெரிவித்தனர்.
வாரத்தின் எல்லா நாட்களிலும் பொருட்கள் வழங்கப்படுவதால், இப்படி ஒரே நேரத்தில் கூட்டமாக வரத்தேவை இல்லை என்றும், அனைவருக்கும் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அதை மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலர்கள் கண்காணிக்கின்றனர் என்றும் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்தார். அவரிடம் பேசி பொதுமக்கள், கைரேகை இயந்திரம் அவ்வப்போது இயங்காததால் பொருட்களை வாங்கிச் செல்வதில் சிரமம் இருப்பதாக தெரிவித்தனர். அதற்கு, உடனடியாக புதிய இயந்திரம் பெற்றுத்தர உறுதியளிப்பதாக தெரிவித்து, புறப்பட்டுச் சென்றார்.