மதுரை: சிலை கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கோரிய பொன் மாணிக்கவேல் மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது. சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில் முன்ஜாமீன் கோரி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில், ‘‘மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. மனுதாரரை கைது செய்து விசாரணை நடத்துவது மிகவும் முக்கியமானது. அப்போது தான் உண்மை தெரியவரும். முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க கூடும்’’ என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் மீதான வழக்கு ஜாமீனில் வெளிவரக் கூடியதா அல்லது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவா என்பது குறித்து, சிபிஐ தரப்பில் விளக்கமளிக்க வேண்டுமென்றும், இந்த மனுவின் மீது இன்று தீர்ப்பளிப்பதாகவும் கூறியுள்ளார்.