சென்னை: மாணவர்களின் காலை உணவு திட்டம் என்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகிற்கே முன்னோடி திட்டம் என்று முதல்வருக்கு பொன்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விவசாயிகள்- தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: பள்ளிக்கு காலையில் செல்லும் குழந்தைகளில் பல பேர் காலை உணவை உட்கொள்ளாமலேயே பள்ளிக்கு வருகின்றனர். காலையில் வெறும் வயிற்றுடன் வரும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பு குறைவு. அதனால் வகுப்பறையில் சோர்வடையும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆசிரியர் நடத்தும் பாடத்தை முழுமையாக கவனிக்கக் கூடிய நிலையில் அவர்களுடைய உடல் நிலையும் மனநிலையும் இல்லாமல் போகிறது.
இதை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு என்பது மாணவர்களின் கல்விக்கு மிக மிக முக்கியமான ஒன்றாகும். இதனால் தாய் உள்ளத்தோடு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தற்போது அந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தி உள்ளார். எனவே காலை உணவு திட்டம் என்பது அடுத்த தலைமுறையை அறிவுசார் தலைமுறையாக ஆக்கக்கூடிய அற்புத திட்டம். அனைத்துத் திட்டங்களிலும் இந்தியாவிற்கு முன்னோடியாக விளங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த திட்டத்திலும் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகிற்கு முன்மாதிரியாக திகழ்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.