பெரம்பூர்: பாண்டிச்சேரியில் கவர்னராக இருந்தபோது தள்ளாடிக்கொண்டிருந்தவர்களை பார்த்ததால் தமிழிசைக்கு எதை பார்த்தாலும் தள்ளாட்டமாக தெரிகிறது என்று அமைச்சர் சேகர்பாபு விமரித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆண்டு முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு காலை உணவு வழங்க திமுக சார்பில், தொடங்கப்பட்ட ‘’அன்னம் தரும் அமுதக் கரங்கள்’’ திட்டத்தின் 90வது நாளான இன்று சென்னை புரசைவாக்கம், ஓட்டேரி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு காலை உணவு வழங்கினார்.
இதன்பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; திமுக கிழக்கு மாவட்டம் சார்பில், அன்னம் தரும் அமுதக் கரங்கள் என்ற பெயரில் தினமும் ஆயிரம் பேருக்கு காலை சிற்றுண்டி தரும் வகையில் பிப்ரவரி மாதம் கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வு நிச்சயம் அறிவித்தபடி 365 நாட்களும் நடைபெறும். இதற்கு உறுதுணையாக இருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி.
இவ்வாறு கூறினார்.
அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி என்று குறிப்பிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலைதள பதிவு குறித்து கேட்டதற்கு, ‘’ஏற்கனவே துப்புக்கெட்ட ஆட்சிக்கு தூத்துக்குடி சாட்சி என்று சொல்லி இருக்கிறோம். பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி சாட்சி என்று சொல்லி இருக்கிறோம். ஆட்சியை பொறுத்தவரை தவறு நடக்கும் பட்சத்தில் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்தான் குற்றம்சாட்ட வேண்டும். வருமுன் காப்போம் என்பது போல் தவறு நடக்கும் முன்பு நடவடிக்கை எடுப்பது ஒருபுறம்.தவறு நடந்து விட்ட பிறகு அதன் மீது கடும் நடவடிக்கை எடுப்பது இன்னொரு புறம். இன்னார் இனியவர் என்று எங்கள் முதலமைச்சருக்கு பாகுபாடு இல்லை.
தவறு சொந்த கட்சியை சேர்ந்தவர்கள் இழைத்திருந்தாலும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் முதல்வரின் நோக்கம், நிலைப்பாடு. அந்த வகையில் இரண்டு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளுடன் சண்டையிடுவது தெரிந்தபின் அவர்களை பணியை விட்டே நீக்கியவர் முதலமைச்சர். நீதியின் ஆட்சி, சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. கடந்த காலத்தில் நடந்தது சாத்தான்கள் ஆட்சி. சாத்தான்குளம் சம்பவமே அதற்கு சாட்சி.
சாலைகள் முறையாக இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளாரோ என்று கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு அளித்த பதிலில், ‘’பாண்டிச்சேரியில் கவர்னராக இருந்த காலக்கட்டத்தில் தள்ளாடிக்கொண்டே இருந்தவர்களை பார்த்துவந்தவர். அதனால் ஏதுவாக இருந்தாலும் அவருக்கு தள்ளாட்டமாக தெரிகிறது. சகோதரி தமிழிசைக்கு மீடியா மேனியா, அதனால் ஏதாவது பேசிக்கொண்டிருப்பார். நீங்கள் நின்றுகொண்டிருக்கும் சாலை எப்படி இருக்கிறது என்று அடுத்த முறை நீங்கள் அவரிடம் சொல்லுங்கள். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக, காங்கிரஸ் பற்றி விமர்சித்துள்ளாரே என்ற கேள்விக்கு, ‘’அவர் வசைபாடாத ஆட்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் வாழ்த்து தெரிவிக்கிறோம்’ என்று அமைச்சர் கூறினார்.