சென்னை: தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க தேர்தல் நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பீகார் மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்கவும், முறைகேடுகள் ஏற்படாமல் தடுக்கும் வகையிலும் வாக்குப் பதிவு நாளில் எல்லா வாக்குச் சாவடிகளிலும் இணையவழி ஒளிபரப்பு மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
அதே சமயம், தேர்தல் சமயங்களில் பணப் பட்டுவாடா, அனுமதிக்கப்பட்டதற்கு மேலாக பணம் எடுத்துச் செல்லுதல், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம், பொருள் ஆகியவற்றை எடுத்துச் செல்லுதல், வாக்குச் சாவடியில் போலி வாக்காளர்கள், ஒருவரே போலி ஆவணங்களை வைத்துக் கொண்டு பலமுறை வாக்களித்தல் எனப் பல முறைகேடுகளைத் தேர்தல் அலுவலர்கள் கண்டுபிடிக்கின்றனர். இந்த முறைகேடுகள் மறைக்கப்படுகின்றன. இவற்றை தவிர்க்கவும், தேர்தலைச் செம்மையாக நடத்தவும், தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க தனி நீதிமன்றங்களை அமைக்கலாம்.
தேர்தல் நீதிமன்றங்கள் என்ற பெயரிலான இதில், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி, மாநில உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆகியோரை அமைத்து விசாரித்து, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கை நடத்தி நிறைவு செய்ய வேண்டும். அந்தந்த மாநில தேர்தல் அலுவலகங்களில் இதற்கென தனி வழக்குரைஞர்களையும் நியமிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.