கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. மேலும், பாதிக்கப்பட்ட 8 பெண்களில் 7 பெண்களுக்கு ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட 8 பேரில் ஒரு பெண் மட்டும் இறுதி வரை சாட்சி சொல்ல வராததால் அப்பெண்ணை தவிர மற்ற பெண்களுக்கு தனித்தனியாக நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
தீர்ப்பு வெளியான பின் பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்களுக்கும் தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரண தொகையான ரூ.25 லட்சம் பாதிக்கப்பட்ட பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. சாட்சி சொல்ல வராத பெண் தவிர மற்ற 7 பெண்களுக்கும் இந்த நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்றம் அறிவித்த நிவாரண தொகையை விரைவில் பாதிக்கப்பட்ட பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 15 நாட்களுக்குள், நிவாரண தொகை வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.