பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர் பகுதி வழியாக, வாகன போக்குவரத்து எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பால், சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு, கோவை ரோடு சந்தேகவுண்டன் பாளைத்திலிருந்து குள்ளக்காபாளையம், அனுப்பர்பாளையம் வழியாக உடுமலை ரோடு திப்பம்பட்டி வரையிலும் கிழக்கு புறவழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, சுமார் 4 ஆண்டுக்கு முன்பு மேற்கு புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சாலையானது, கோவைரோடு ஆச்சிப்பட்டி அருகே சக்திமில் பின்புறம் துவங்கி ஆ.சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், டி.நல்லிக்கவுண்டன்பாளையம், தாளக்கரை, நல்லூர் பிரிவு மீன்கரைரோட்டை சென்றடையும் வகையில், சாலை அகலத்திற்காக தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.
சுமார் 3 ஆண்டுக்கு முன்பு மேற்கு புறவழிச்சாலை பணி ஆரம்பிக்கப்பட்டது. முதற்கட்டமாக கோவைரோடு ஆச்சிப்பட்டி சக்திமில் அருகே இருந்து, மீன்கரைரோடு நல்லூர் பிரிவு வரையிலும் உள்ள சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகலப்படுத்தப்பட்டு ஜல்லிகற்கள் போட்டு சமன்படுத்தப்பட்டது.ஆனால், அதன்பின் புறவழிச்சாலையை அகலப்படுத்தும் பணியை விரைந்து நிறைவு செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இருப்பினும், 2 ஆண்டுக்கு முன்பு ஜல்லி போடப்பட்ட சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்படுகின்றனர். மழைக்காலத்தில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு குளம்போல் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில மாதத்திற்கு முன்பு, பாலக்காடு ரோடு நல்லூர் பிரிவிலிருந்து ஜமீன்ஊத்துக்குளி கைக்காட்டி வரையிலும் ரோடு விரிவாக்கத்திற்காக, மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது.
ஆனால், அதன்பிறகும், தார்ரோடு அமைத்து விரைந்து அகலப்படுத்தும் பணி மந்தமானது. எனவே, இடையூறு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் வகையில், நகர் பகுதிக்கு கனரக வாகனங்கள் வருவதை தவிர்க்கவும், வாகன ஓட்டிகளுக்கு வசதியாகவும், மேற்கு புறவழிச்சாலை பணியை மீண்டும் துவங்கி விரைந்து நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.