பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் தென்னைக்கு அடுத்தப்படியாக மானாவாரி பயிர்களான மக்காசோளம், நிலக்கடலை, தட்டைப்பயிர் உள்ளிட்டவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை, ஆடி மற்றும் தை பட்டத்தை எதிர்நோக்கி பயிர்கள் விதைக்கப்பட்டு குறிப்பிட்ட நாட்களில் அறுவடை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்ததால், மானாவாரி பயிரிட விவசாயிகள் கோடை மழையை எதிர்நோக்கி இருந்தனர். கடந்த மாதம் சில நாட்களில் குறிப்பிட்ட சில மணி நேரம் கோடை மழை பெய்தது. அதன்பின் போதிய மழை இல்லாமல் இருந்தாலும், அண்மையில் கோடை வெயிலின் தாக்கம் மறைந்து பருவமழை துவங்கியது.
இதையடுத்து, விவசாயிகள் பலர் தங்கள் விளைநிலங்களில் மானாவாரி பயிர் மற்றும் காய்கறி சாகுபடியை அதிகரிக்க செய்ய துவங்கியுள்ளனர். இதில் அதிகபடியாக நிலக்கடலை மற்றும் மக்காசோளம் விதைப்பு பணியை மேற்கொள்கின்றனர். சுற்று வட்டாரத்தில் கோவிந்தனூர், சமத்தூர், பொன்னாபுரம், வடக்கிபாளையம், சூலக்கல், ராசக்காபாளையம், கோமங்கலம்புதூர், முத்தூர், நல்லிகவுண்டன்பாளையம், கோட்டூர் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் மானாவாரி பயிர்களை பயிரிட தங்கள் விளை நிலங்களில் ஏர் உழுது சீர்படுத்தியுள்ளனர். தற்போது பெய்யும் பருவமழையால், சாகுபடி செய்யப்படும் பயிர்கள் தளைக்க ஏதுவாக இருக்கும் என்று விவசாயிகள் பலர் கருத்து தெரிவித்தனர்.