சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ கேடயத்தைத் தூக்கி புனிதர் வேடம் தரிக்க முயல்கிறார் பழனிசாமி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: என் ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதால் தான் இத்தீர்ப்பு கிடைத்துள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். தனது கட்சிக்காரர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிந்து, வழக்கை மூடி மறைக்க முயன்றவர் தான் இவர். நாடாளுமன்ற தேர்தலில் பாதிப்பு வரும் என்று அஞ்சியே சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.
இதனால்தான் வழக்கு நியாயமாக நடந்து முடிந்து, அந்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தண்டிக்கப்பட்டிருப்பதால் அதன் கறை தன் மீது விழுந்துவிடக் கூடாது என்பதற்காக சிபிஐ என்ற கேடயத்தைத் தூக்கிக் கொண்டு புனிதர் வேடம் தரிக்க முயல்கிறது அதிமுக. புகார் அளித்த மாணவியின் சகோதரர் பூபாலனை குற்றவாளிகள் தரப்பு தாக்கியது. பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை எல்லாம் போட்டு அரசாணை வெளியிட்டார்கள். இவையெல்லாம் பாதிக்கப்பட்ட பெண்களின் தரப்பை அச்சுறுத்த அன்றைக்கு இருந்த பழனிசாமி அரசு மேற்கொண்ட அஸ்திரங்கள். அதிமுக எவ்வளவு அரசியல் கேவலங்களை அரங்கேற்றினாலும் இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.