சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தங்களை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட தடை கோரி பொள்ளாச்சி ஜெயராமன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், தங்களை தொடர்பு படுத்தி அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதிக்க கோரி முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன் ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த மனுவில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தங்களை தொடர்பு படுத்தி நக்கீரன் யூடியூப், அறன் செய், ஜீவா டுடே, ஜாம்பவான் உள்ளிட்ட 8 யூடியூப் சேனல்கள் அவதூறு கருத்துகளை வெளியிட்டுள்ளன.
எனவே, அந்த வீடியோக்களை அகற்றுமாறு உத்தரவிட வேண்டும். எங்களுக்கு மான நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் வழங்க யூடியூப் சேனல்களுக்கு உத்தரவிட வேண்டும். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தங்களை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி, வழக்கை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.