கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அதிமுக ஆட்சியின்போது 8க்கும் ேமற்பட்ட இளம்பெண்களை வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்த பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகிய 5 பேர் கடந்த 2019-ம் ஆண்டும், ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் (32) ஆகிய 4 பேர் கடந்த 2021-ம் ஆண்டும் கைது செய்யப்பட்டனர். கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில், 50-க்கும் மேற்பட்ட அரசுத்தரப்பு சாட்சியங்கள், சுமார் 200 ஆவணங்கள், 40 மின்னணு தரவுகள் உள்பட பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் விசாரணைக்கு சேர்க்கப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் 8 பேர், விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர். இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை கோவை சிபிஐ நீதிமன்றத்தில், நீதிபதி ஆர்.நந்தினிதேவி முன்னிலையில் நேற்று நடந்தது. இவ்வழக்கில், பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கவுதம், மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜா ஆகியோர் நேற்று கோர்ட்டில் சாட்சியம் அளித்தனர். இதையடுத்து, இவ்வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) மீண்டும் நடைபெறும் என நீதிபதி ஆர்.நந்தினிதேவி அறிவித்தார்.