பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட, சோமனூரை சேர்ந்த ரவிக்குமார் மகன் வருண்காந்த் (22) கடந்த மாதம் 12ம் தேதி அடித்து கொலை செய்யப்பட்டு, தோட்டத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டார். இந்த கொலை வழக்கில் காப்பக நிர்வாகிகள் உள்பட 11 பேரை ஏஎஸ்பி கிருஷ்டிசிங் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொள்ளும் தனிப்படையில் ஒருவராக, மகாலிங்கபுரம் காவல் நிலைய எஸ்ஐ நவநீதகிருஷ்ணன் (32) இருந்தார்.
இந்நிலையில், காப்பக நிர்வாகிகளை கைது செய்தபோது அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 18 பவுன் நகை மற்றும் ரூ.1.52 லட்சம் ரொக்கத்தை எஸ்ஐ நவநீதகிருஷ்ணன் கணக்கில் கொண்டு வராமல் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, எஸ்ஐ நவநீதகிருஷ்ணனிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.ஆனால், அவர் தனக்கு எதுவும் தெரியாதது போல் பதில் அளித்துள்ளார். இருப்பினும், உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் போலீஸ் காவலுக்கு செல்ல வேண்டியவர்கள் அணிந்திருந்த நகை மற்றும் அவர்கள் வைத்திருந்த பணத்தை கணக்கில் காட்டாமல் கையாடல் செய்து மறைத்து வைத்திருந்ததை அவரே ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து மகாலிங்கபுரம் போலீசார் எஸ்ஐ நவநீதகிருஷ்ணன் மீது, கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணத்தை கணக்கில் கொண்டு வராமல் மறைத்து கையாடல் செய்ததாக, வழக்குப்பதிந்து நேற்று அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 18 பவுன் நகை மற்றும் ரூ.1.52 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.