பொள்ளாச்சி: வரத்து அதிகரிப்பால் பொள்ளாச்சி மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவடைந்ததால் கிலோ ரூ.10க்கு விற்பனையானது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில், தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி தக்காளி சாகுபடி அதிகமாக இருந்தது. கடந்த ஜூலை மாதம் முதல் பெய்த தென்மேற்கு பருவமழையால், தக்காளி விளைச்சல் அதிகமாக இருந்தது. இதை அடுத்து இந்த மாதம் துவக்கத்திலிருந்து பல்வேறு கிராமங்களில் தக்காளி அறுவடை துவங்கியது.
மேலும் கடந்த சில வாரமாக, கிணத்துக்கடவு, உடுமலை, தளி, குடிமங்கலம் உள்ளிட்ட பகுதியிலிருந்தும் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்தது. இதனால் தக்காளி விலை சரிந்தது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, ஒரு கிலோ தக்காளி ரூ.15 முதல் ரூ.28 வரை என தரத்துக்கு ஏற்ப கூடுதல் விலைக்கு விற்பனையானது. கடந்த சில நாட்களாக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தக்காளி வரத்து அதிகமாக இருந்தது. விசேஷ நாட்கள் குறைந்ததால் தக்காளி விலை மீண்டும் சரிந்தது. நேற்று, ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.13 என குறைந்த விலைக்கு விற்பனையானது. வரும் நாட்களில், தக்காளி வரத்து மேலும் அதிகரித்தால் விலை இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.