பொள்ளாச்சி: பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்களும், நர்ஸ்களும், பயிற்சி டாக்டர்கள் என ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் பயன்படுத்தும் கழிப்பறை தனியாக உள்ளது. நேற்று முன்தினம் கழிப்பறைக்கு சென்ற பெண் நர்ஸ் ஒருவர், அங்கிருந்த பிரஷ்ஷில் ரப்பர் பேண்டால் கட்டப்பட்ட பேனா வடிவிலான கேமரா ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் (ஆர்எம்ஓ) மாரிமுத்து என்பவரிடம் தகவல் தெரிவித்தார். அவர், உடனடியாக மருத்துவமனை கழிப்பறைக்கு சென்று பார்த்தார். அப்போது, அங்கிருந்த பிரஷ்ஷில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. ரகசிய கேமராவை வைத்தது யார்? என்று விசாரணை நடத்தியதில், மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு எம்எஸ் ஆர்த்தோ பயிற்சி மருத்துவராக பணியாற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதி சேர்ந்த பயிற்சி மருத்துவர் வெங்கடேஷ் (33) என்பவர் கழிப்பறை பிரஷ்ஷில் ரப்பர் பேண்ட் கட்டி ரகசியமாக பேனா வடிவிலான கேமராவை வைத்து கண்காணித்து வந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் வழக்குப்பதிந்து பயிற்சி மருத்துவர் வெங்கடேஷை கைது செய்து விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ரகசிய கேமரா வைக்கப்பட்டுள்ளதா? என கழிவறைக்கு சென்று மருத்துவ அதிகாரிகள் கண்காணிக்கும் போது, தனக்கு எதுவும் தெரியாது போல் வெங்கடேஷும் அந்த கேமராவை பார்த்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்த ரகசிய கேமராவில் இருந்த மெமரி கார்டை வெங்கடேஷ் எடுத்ததும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட பயிற்சி டாக்டர் வெங்கடேஷ் கோவை அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்ததும், பொள்ளாச்சி மருத்துவமனையில் கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் பணியில் சேர்ந்து பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. பயிற்சி மருத்துவர் பயன்படுத்திய ரகசிய கேமரா சுமார் பத்து நாட்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. வெங்கடேஷ் மற்ற மருத்துவமனையில் இதுபோன்று வேறு ஏதாவது கேமரா வைத்து கண்காணித்தாரா? என்ற போலீசார் விசாரணை நடந்து வருகிறது.