*தனித்தனி குழுவாக சென்றனர்
பொள்ளாச்சி : ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி வன கோட்டத்திற்குட்பட்ட வன சரகங்களில், கோடை கால வன விலங்கு கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. இதில், வனத்துறையினர் தனித்தனி குழுவாக சென்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனச்சரகங்களில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்பும். மே மாதத்தில் கோடைகால வனவிலங்கு கணக்கெடுப்பு என இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.
இதில், இந்த ஆண்டுக்கான கோட கால வனவிலங்கு கணக்கெடுப்பானது, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி வன கோட்டத்திற்குட்பட்ட வனச்சரக வனப்பகுதியில் நேற்று துவங்கியது. இதில், பொள்ளாச்சி வனச்சரக பகுதியில், போத்தமடை, தம்பம்பதி உள்ளிட்ட இடங்களில், வனச்சரகர் புகழேந்தி முன்னிலையில் வேட்டைத்தடுப்பு காவலர், வனவர், வனக்காப்பாளர், தன்னார்வலர் உள்பட 5 பேர் கொண்ட குழுவினர் வன விலங்கு கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சில இடங்களில், சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் கால்தடம் இருப்பதை வனத்துறையினர் அறிந்தனர். அதனை வனத்துறையினர் ஆய்வு செய்தார். அதுபோல், டாப்சிலிப்பை சுற்றியுள்ள வனப்பகுதியில், வனச்சரகர் வடிவேல் முன்னிலையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. அப்போது, வனத்துறையினர் யானைளை நேரில் பார்த்து கணக்கெடுத்துள்ளனர். மேலும் பல இடங்களில், கண்ணில் தென்பட்ட யானைகளின் கால் தடம், சாணம் போன்றவற்றை கொண்டும், அங்கு யானைகள் நடமாட்டம் உள்ளது என்பதை அறிந்து கணக்கெடுத்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி மற்றும் டாப்சிலிப் வனச்சரகங்களில், நேற்று துவங்கப்பட்ட கோடைக்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணியானது, வரும் 29 வரை நடைபெறும் என்றும். அந்தந்த வனச்சரகங்களில் 5 குழுவினர் தனித்தனியாக சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.