கோபி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய மேலும் சில குற்றவாளிகள் வழக்கில் இருந்து தப்பி விட்டதாக பொதுமக்கள் கூறுவதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என சுப்பராயன் எம்பி, தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள பொலவபாளையம் கிராமத்தில் பொதுமக்களிடம் குறைகேட்பு முகாம் நடைபெற்றது. இதில் சுப்பராயன் எம்பி கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
பின்னர் சுப்பராயன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தப்பிக்க வைக்க முயற்சி செய்தனர். ஆனால், இந்த வழக்கில் நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிமன்றம் நம்பிக்கைக்கு உரியதாகதான் உள்ளது என்பதை சுட்டி காட்டி இருக்கிறது. இந்த தீர்ப்பு பெரும் வரவேற்பிற்கு உரியதாக இருந்தாலும், இந்த வழக்கில் தொடர்புடைய சில முக்கிய நபர்கள் தப்பி விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அன்று அதிகாரத்தில் இருந்தவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, தண்டிக்கப்பட வேண்டியவர்கள் விடுவிக்கப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த ஆட்சி காலத்தில் இந்த வழக்கு விசாரணை மந்தமாக இருந்த நிலையில் கடும் எதிர்ப்பு எழுந்ததைத்தொடர்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடியிலிருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்டு உள்ள தண்டனை அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருந்து சித்ரவதை அனுபவிக்க வேண்டும் என்ற தீர்ப்பு சரியானது தான். இவ்வாறு அவர் கூறினார்.