*ஒரே நாளில் 5 ஆயிரம் மாடுகளுக்கு போடப்பட்டது
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட நகர் மற்றும் கிராம பகுதிகளில், மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் துவங்கியது. ஒரே நாளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை நகர் மற்றும் கிராம புறங்களில், ஒவ்வொரு ஆண்டிலும் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை இருக்கும் போது, அந்த நேரத்தில் கால்நடைகளுக்கு வாய்சப்பை எனப்படும் கோமாரி நோய் தாக்குதல் ஏற்படும்.
இந்த நோயிலிருந்து கால்நடைகளை காத்துக்கொள்ள தடுப்பூசி போடும் பணியில் கால்நடை மருத்துவ குழுவினர் ஈடுபடுகின்றனர். தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் மட்டும் காளைமாடு, பசுமாடு, எருமை என சுமார் 86 ஆயிரத்திற்கும் மேல் உள்ளதாக தெரியவந்துள்ளது.இந்தாண்டில், தற்போது பெய்ய துவங்கிய வடகிழக்கு பருவமழைக்கு, அனைத்து விதமான மாடுகளுக்கும் கோமாரி நோய் பரவலை தடுக்கும் விதமாக, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட நகர் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள காளை மாடு, பசுமாடு மற்றும் எருமை உள்ளிட்டவைகளுக்கு நேற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியை கால்நடை மருத்துவ குழுவினர் துவங்கினர்.
இதற்காக, ஒரு குழுவில் ஒரு கால்நடை மருத்துவர், உதவியாளர், மருந்தாளுனர் உள்ளிட்ட 3 பேர் அடங்கிய 39 குழுவினர் பல்வேறு கிராமங்களுக்கு பிரிந்து, விவசாயிகள் தோட்டத்திற்கு நேரடியாக சென்று அங்குள்ள மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாவும், மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி வரும் 27ம்தேதி வரை நடைபெறும் என கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.