Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

பொள்ளாச்சி அருகே காப்பகத்தில் இருந்து மாயமானவர் வழக்கில் திருப்பம்; அரை நிர்வாணமாக்கி, மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்து வாலிபர் அடித்துக்கொலை: கைதான 11 பேர் திடுக்கிடும் வாக்குமூலம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே காப்பகத்தில் பெண் நிர்வாகி முகத்தில் எச்சில் துப்பிய ஆத்திரத்தில் மனவளர்ச்சி குன்றிய வாலிபரை நிர்வாணப்படுத்தி, மிளகாய் பொடியை உடலில் தூவி கொடுமைப்படுத்தி கிரிக்கெட் பேட்டால் சரமாரியாக தாக்கி கொன்றது தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டம், சோமனூர் அருகே மாதப்பூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் வருண்காந்த் (22). மனவளர்ச்சி குன்றியவர். இதற்காக பொள்ளாச்சி அருகே உள்ள மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர். இந்த நிலையில் வருண்காந்த் திடீரென மாயமானார். விசாரணையில் காப்பக நிர்வாகிகள் வருண்காந்தை அடித்துக்கொன்று நடுப்புணி அருகே உள்ள பி.நாகூரில் உள்ள தோட்டத்தில் குழிதோண்டி புதைத்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் கடந்த 24ம் தேதி வருண்காந்த் சடலத்தை போலீசார் தோண்டி எடுத்தனர்.

இதையடுத்து காப்பக நிர்வாகி கிரிராம் (36), நிர்வாகி சாஜியின் தந்தை செந்தில்பாபு (55), காப்பாளர்கள் ரித்தீஷ் (26), சதீஷ் (25), ஷீலா (27), பணியாளர் ரங்கநாயகி (32) ஆகிய 6 பேரை முதலில் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான சாஜி (32), மனநல ஆலோசகரும், காப்பக நிர்வாகியுமான கவிதா (52), கவிதாவின் கணவர் லட்சுமணன் (56), மகள்கள் ஸ்ருதி (24), ஸ்ரேயா (26) ஆகிய 5 பேரை 10 நாட்களுக்கு பின்னர் தனிப்படை போலீசார் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கைது செய்தனர். இவர்கள் 11 பேர் மீதும் கொலை, கொலையை மறைத்தது, கூட்டு சதி, தடயங்களை அழித்தது என 6 பிரிவுகளில் வழக்குப்பதிந்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். வருண்காந்த் கொலை குறித்து கைதானவர்கள் அளித்த வாக்குமூலம் வருமாறு: கடந்த பிப்ரவரி 5ம் தேதி வருண்காந்தை அவரது பெற்றோர் காப்பகத்தில் அனுமதித்தனர். வருண்காந்த் எங்களது பேச்சை கேட்காமல் அதிகமாக கோபப்பட்டார்.

கடந்த 9ம் தேதி அங்குள்ளவர்களை மேட்டுப்பாளையத்திற்கு சுற்றுலா அழைத்துச் சென்றோம். ஆனால் வருண்காந்த்தை மட்டும் விட்டுச்சென்றோம். இதேபோல் ஒரு பிறந்தநாள் விழாவிற்கும் அவரை விட்டு மற்றவர்களை அழைத்துச்சென்றோம். இதனால் கடந்த 12ம் தேதி வருண்காந்த் எங்களை பார்த்து கூச்சல் போட்டு, கவிதா மீது எச்சில் துப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் அவரை பயங்கரமாக தாக்கினோம். இதன்பின்னர் அவர் சரிவர சாப்பிடவில்லை. இதனால் அவரை அரை நிர்வாணமாக்கி, உடலில் மிளகாய் பொடி தூவி, கிரிக்கெட் பேட் மற்றும் ஸ்டெம்பால் தாக்கினோம். இதில் மயங்கி விழுந்த வருண்காந்த் இறந்தார். இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று ஊழியர்களை மிரட்டினோம்.

அவர்களது செல்போனை வாங்கி சுவிட்ச்-ஆப் செய்து வைத்துக்கொண்டோம். கொலையை மறைப்பதற்காக, வருண்காந்த் உடலை பாலித்தீன் கவரில் சுற்றி, கவருக்குள் மாட்டுச்சாணம் போட்டு காரில் ஏற்றி நடுப்புணியில் உள்ள கவிதாவின் தோட்டத்திற்கு கொண்டு சென்று குழிதோண்டி புதைத்து, அதன்மேல் செடிகளை நட்டுவித்தோம். பின்னர் வருண்காந்த்தை ஆழியாருக்கு அழைத்து சென்றதாகவும், அங்கு காணாமல் போனதாகவும் நாடகமாடினோம். ஆனால் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துவிட்டனர். இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.