*அதிகாரிகள் நேரில் ஆய்வு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பொட்டுமேடு பகுதியிலிருந்து ஆரம்பிக்கும் பெரிய அளவிலான கழிவு நீரோடையானது மரப்பேட்டை, நேரு காலனி, கண்ணப்பன் நகர் வழியாக சென்று கிருஷ்ணா குளத்தை சென்றடைகிறது. மழைக்காலத்தின்போது, இந்த பிரதான நீரோடையில் தண்ணீர் ஆர்ப்பரித்து வரும்போது, அதனை தொட்டுள்ள குடியிருப்புகளில் புகுந்து விடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, திடீர் என கனமழை பெய்யும்போது தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்துவிடும் சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில், நடப்பாண்டில் பொள்ளாச்சி பகுதியில் தாழ்வான பகுதியில் குடியிருப்பு மற்றும் பிரதான கழிவு நீரோடை அருகே உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிலும் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரிய அளவிலான சாக்கடையில் மழைநீர் விரைந்து செல்ல வசதியாக நகராட்சி மூலம் தூர்வாரி ஆழப்படுத்தும் பணியும், அதில் தேங்கி அடைந்த நிலையில் இருந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியும் அண்மையில் துவங்கப்பட்டது. தற்போது அப்பணி நிறைவடைந்த நிலையில், ஆழப்படுத்தி சீரமைக்கப்பட்ட பெரிய அளவிலான கழிவுநீர் ஓடையில் மழைநீர் தேங்காமல் ஆறுபோல் விரைந்து செல்கிறது.
நகராட்சி மூலம் தூர்வாரப்பட்ட பிரதான கழிவு நீரோடை பகுதியை நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் கணேசன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மழைநீர் புகும் இடமாக தெரியும் பகுதியையும் ஆய்வு செய்து, அங்கு தேவையான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
இது குறித்து நகராட்சி ஆணையாளர் கணேசன் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி நகராட்சியின் மையப்பகுதியில் சின்னாம்பாளையம் ஊராட்சியிலிருந்து தொடங்கி மரப்பேட்டை பெரியார் காலனி, நடராஜ் மணியகாரர் காலனி போன்ற முக்கிய மையப்பகுதியின் வழியாக சென்று நகராட்சி எல்லையான கண்ணப்பன் நகர் வழியாக நீரோடை செல்கிறது. நகராட்சி எல்லைக்குட்பட்ட தாழ்வான பகுதிகள், மழைநீர் வடிகால் கால்வாய்கள், சின்னாம்பாளையம் மரப்பேட்டை ஓடை மருதமலை ஆண்டவர் லே-அவுட் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுத்தம் செய்து தூர்வாரப்பட்டுள்ளது.
நகரின் பொட்டுமேடு மரப்பேட்டை பள்ளம் சுடுகாட்டு பள்ளம், நேருநகர், பெரியார் காலனி, கல்லுக்குழி, குமரன்நகர், கண்ணப்பன்நகர், அண்ணாகாலனி, ஷெரிப் காலனி, மோதிராபுரம், இட்டோரி மருதமலை ஆண்டவர் லே-அவுட் போன்ற தாழ்வான பகுதிகள் உள்ளன.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்காக தெப்பக்குளம் நகராட்சிப்பள்ளி, சிக்கன செட்டியார் துவக்கப்பள்ளி, குமரன் நகர் நகராட்சி துவக்கப்பள்ளி, ஏபிடிரோடு நகராட்சி பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் நிவாரண மையமாக தயார்படுத்தப்பட்டுள்ளது. அங்கு போதியளவு மின்சாரம், குடிநீர், கழிப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.