பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாட்டுச்சந்தை வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை கூடுகிறது. இச்சந்தைக்கு சுற்றுவட்டார பகுதி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் விற்பனைக்காக கால்நடைகள் கொண்டு வரப்படுகின்றன.
கடந்த 2 வாரமாக ஆந்திராவில் இருந்து மாடுகள் வரத்து குறைவாக இருந்தது. இருப்பினும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 1800க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. மேலும், கேரள வியாபாரிகள் வருகை அதிகரிப்பால் கூடுதல் விலைக்கு கால்நடைகள் விற்பனையானது.
நேற்று கூடிய சந்தையின்போதும், வெளி மாநிலங்களிலிருந்து மாடு வரத்து மிகவும் குறைவாகவே இருந்தது. மேலும், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்வதால், வெளி மாவட்டங்களிலிருந்தும் சுமார் 800க்கும் குறைவான மாடுகளே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
இருப்பினும், தமிழகத்தின் பல்வேறு மாட்டங்களிலிருந்து வந்த வியாபாரிகள் மட்டுமின்றி, கேரள பகுதியிலிருந்து வந்த வியாபாரிகளும் குறிப்பிட்ட விலை நிர்ணயித்து வாங்கி சென்றனர். இதனால், மழையிலும் மாடு விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.
இதில், காளை மாடு ரூ.55 முதல் ரூ.65 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரத்துக்கும், பசுமாடு ரூ.40 ஆயிரத்துக்கும் கன்று குட்டிகள் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.20ஆயிரம் வரையிலும் என கடந்த வாரத்தை போல் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.